நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

சமுத்திரகனி இயக்கியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியாக இருந்த ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாடோடிகள்-2’. இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். 

இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பிரவீண்குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், படத் தயாரிப்பாளர் நந்தகுமார், தனக்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்பதால் படத்தின் உரிமை தனக்கே சொந்தம் என அறிவிப்பதுடன், படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரப்பட்டு இருந்தது. 

இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். பின்னர், ‘நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட நிபந்தனைகளுடன் இடைக்கால தடை விதிக்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

அதேநேரம், மனுதாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய ரூ.1.75 கோடியை 2 வாரத்துக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan