விக்ரம் படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்

விக்ரம் படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் கதாநாயகன் ஷேன் நிகம். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், அடுத்ததாக நடிக்க இருந்த வெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட நாட்களாக வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார். 

இதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மலையாள தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு இதில் தீர்வு கண்டது. இருப்பினும் அவர் 2 மலையாள படத்தில் நடித்த பிறகு தான் வேறு படங்களில் நடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனிடையே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ படத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த கதாபாத்திரத்தில் சர்ஜனோ கலித் எனும் இளம் நடிகர் நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிக் பிரதர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan