பின்வாங்காத வையக வீரர் சூர்யா…. பார்த்திபன் புகழாரம்

பின்வாங்காத வையக வீரர் சூர்யா…. பார்த்திபன் புகழாரம்

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் வெளியிடும் சூர்யாவின் துணிச்சலை, இயக்குனர் பார்த்திபன் பாராட்டி உள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணையதளத்தில் சூர்யா வெளியிடுகிறார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் எச்சரித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந்தேதி படம் இணையதளத்தில் வெளியாகிறது. 

இதனை நடிகர் பார்த்திபன் வரவேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: நமது முடியை திருத்தலாமா, வேண்டாமா? என்று யோசிக்கிற ஒரு நிலைமை வந்து விட்டது. திருத்தம் என்பது முடியில் மட்டும் இல்லை. சட்ட திருத்தங்கள், தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்கள் இப்படி நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது. 

தைரியம்தான் புருஷ லட்சணம் என்பார்கள். ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, கவுரவ காதலராக வைத்த காலை பின்வாங்காத வையக வீரராக ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுகிறார். சூர்யாவுக்கு வாழ்த்துகள். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan