காதல் கைகூடியது எப்படி? – மனம் திறந்த ராணா

காதல் கைகூடியது எப்படி? – மனம் திறந்த ராணா

மிஹீகா பஜாஜ் உடனான காதல் குறித்து நடிகர் ராணா டகுபதி சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.

ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர். 

இந்நிலையில் மிஹீகாவுடனான காதல் பற்றி நடிகை லக்‌ஷ்மி மஞ்சுவுடன் இன்ஸ்டகிராமில் உரையாடினார் ராணா டகுபதி. அவர் கூறியதாவது: திரைத்துறையைச் சேர்ந்தவரைத் தான் திருமணம் செய்யவேண்டும் என நான் நினைக்கவில்லை. மிஹீகாவைச் சந்தித்தேன், அவரைப் பிடித்தது, அவ்வளவுதான். என் காதலியைக் கண்டுகொண்டேன். அவரைச் சந்தித்தபோது அவருடன் நீண்ட நாள் வாழவேண்டும் என எண்ணினேன். 

எல்லாமே வேகமாகவும் எளிமையாகவும் முடிந்துவிட்டது. சரியான நபரைச் சந்திக்கும்போது சரியான விஷயங்கள் நடந்துவிடும். அவரிடம் காதலைச் சொல்ல தொலைபேசியில் அழைத்தபோது நான் எந்த இடத்துக்கு வருகிறேன் என்பதை அவர் புரிந்துகொண்டார். நேரில் சந்தித்தோம். அவ்வளவுதான். என் காதலைச் சொன்னவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் மிகவும் சந்தோஷப்பட்டார். கொரோனா அச்சுறுத்தல் நிலவும் விநோதமான சூழலில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளேன்.

நான் ஏன் ஒரு தெலுங்குப் பெண்ணைத் திருமணம் செய்யவில்லை எனக் கேட்கிறீர்கள். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் என் வீட்டுக்கு அருகே தான் வசிக்கிறார். சரளமாக இல்லாவிட்டாலும் தெலுங்கு பேசுவார். எங்கள் இருவருடைய உலகமும் ஒன்றானது. என் குடும்பத்தினருடன் அவருக்கு நட்பு உண்டு. மும்பையில் உள்ள அவருடைய நண்பர்களை நான் அறிவேன் என்றார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan