நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் அட்லீயின் அடுத்த படம்

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் அட்லீயின் அடுத்த படம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, தனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 ஆண்டு இடைவேளைக்கு பின் ‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார் அட்லீ. விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ஓடிடி-யில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இம்மாதம் 19-ந் தேதி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan