மறுதயாரிப்பு படம் மூலம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா-கார்த்தி?

மறுதயாரிப்பு படம் மூலம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா-கார்த்தி?

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி-சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு படம் இனிமேல் வருமா? என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன்படி இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி-தனுஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது, பின்னர் சசிகுமார்-ஆர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. அதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது அந்த படத்தில் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சகோதரர்களான இவர்கள் இருவரும் ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு காட்சியில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் உறுதியானால், அவர்கள் இணைந்து நடிக்கும் முதல் முழுநீள படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan