உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்

உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்

சொந்த ஊர் திரும்ப உதவி செய்த பிரபல இந்தி நடிகருக்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறியுள்ளனர்.

இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை பஸ், விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

இந்தநிலையில் சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு அந்த பகுதியை சேர்ந்த சிலர் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று உதவி கேட்டனர். இதையடுத்து சோனு சூட் சயான்கோலி வாடாவில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். எனினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் பஸ் மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இதில் முதல் பஸ் நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்சை அனுப்பி வைத்தார். மேலும் பத்திரமாக செல்லுமாறு தமிழர்களிடம் கூறினார்.

இதேபோல தங்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan