ஈரம் 2 கதை தயார்… ஷங்கருக்காக காத்திருக்கும் இயக்குனர்

ஈரம் 2 கதை தயார்… ஷங்கருக்காக காத்திருக்கும் இயக்குனர்

ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கி வெற்றி பெற்ற ஈரம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் 2ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், காஞ்சனா, திருட்டுப்பயலே, சாமி, பில்லா, வேலைஇல்லா பட்டதாரி, அரண்மனை, சண்டக்கோழி, விஸ்வரூபம், கோலி சோடா, மாரி, தமிழ் படம், கலகலப்பு உள்ளிட்ட பல படங்கள் 2ம் பாகமாக வந்துள்ளன. சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன. 

இவற்றில் சில படங்கள் நல்ல வசூல் பார்த்தன. சில படங்கள் தோல்வி அடைந்தன. தற்போது அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகிறது. விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. 

இந்த நிலையில் ஈரம் பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. ஈரம் படம் 2009-ல் திரைக்கு வந்தது. கொலையுண்ட ஒரு பெண்ணின் ஆவி தண்ணீர் வடிவத்தில் வந்து கொலையாளிகளை பழிதீர்ப்பதே கதை. இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அறிவழகன் இயக்கி இருந்தார். ஷங்கர் தயாரித்து இருந்தார். 

இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. அறிவழகன் கூறும்போது, ஈரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான கதையை தயார் செய்துள்ளேன். ஷங்கர் தயாரிக்க தயாராகும்போது ஈரம் 2ம் பாகம் உருவாகும்“ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan