சுஷாந்த் இல்லாமல் தோனி 2 சாத்தியமில்லை – தயாரிப்பாளர் அருண் பாண்டே

சுஷாந்த் இல்லாமல் தோனி 2 சாத்தியமில்லை – தயாரிப்பாளர் அருண் பாண்டே

சுஷாந்த் சிங் மரணமடைந்தால் தோனி இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக தயாரிப்பாளர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பெயரும், புகழும் பெற்றார். 2016-ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் அவரது அபார நடிப்பு அனைவரையும் அசரவைத்தது. தோனியின் ஸ்டைல், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்டமுறை என்று அவரின் அனைத்தையும் கண்முன்னே கொண்டுவந்திருப்பார். 

சுஷாந்த் சிங்கின் கடுமையான உழைப்பின் காரணமாகவே அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. “M.S. Dhoni: The Untold Story” படத்தில் தோனியின் இளம் வயது முதல் அவர் இந்தியாவுக்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று சாதித்தது வரை படமாக்கி இருந்தனர். 

இந்நிலையில், உலகக்கோப்பைக்கு பின்னர் தோனியின் வாழ்க்கையில் நடந்த கிரிக்கெட் மற்றும் சொந்த அனுபவங்கள் குறித்து ‘தோனி  2’ படமாக தயாரிக்க தயாரிப்பாளர் அருண் பாண்டே முடிவு செய்திருந்தார். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. 

தற்போது சுஷாந்த் சிங் மரணமடைந்து விட்டதால், அவர் அளவுக்கு அந்த கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்கு ஆளே இல்லை என்றும் அதனால் தோனி 2 படம் எடுக்கும் முடிவை கைவிட்டுள்ளதாகவும் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan