ஹாலிவுட்டில் நடித்ததால் கோட்டு சூட் ஆசை நிறைவேறியது – நெப்போலியன்

ஹாலிவுட்டில் நடித்ததால் கோட்டு சூட் ஆசை நிறைவேறியது – நெப்போலியன்

ஹாலிவுட் படத்தில் நடித்ததால் கோட்டு சூட் ஆசை நிறைவேறியதாக நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர், நெப்போலியன். நடிகர், தொழில் அதிபர் என இவருக்கு இரண்டு முகங்கள். மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார். அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகை மறக்கவில்லை. ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

ஹாலிவுட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நெப்போலியன் கூறியதாவது: ‘’1990-ல் குருநாதர் பாரதிராஜா மூலம் திரையுலகுக்கு அறிமுகமானேன். 4 காட்சிகளிலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தேன். இருப்பினும் என் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்தேன். 

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கினேன். சினிமா என் தொழிலாக மாறியது. இதற்கிடையே அரசியலில் ஈடுபட்டேன். என் மகனின் உடல்நிலை கருதி சினிமா, அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றேன். டெல் கணேசன் என் நெருங்கிய நண்பர். பட அதிபரான அவர், ‘’நான் எடுக்கும் படங்களில் நீங்கள் இருக்க வேண்டும்‘’ என்றார். அவர் எங்கள் ஊர்க்காரர் என்பதால் தொடர்ந்து அவருடைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்கள் மேலோங்கி நிற்கின்றன. தமிழில், ஒரு படத்தின் படப்பிடிப்பில் 100 பேர் கொண்ட குழுவினர் பணிபுரிவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் 15 அல்லது 20 பேர்களை வைத்துக் கொண்டு அழகாக படம் எடுக்கிறார்கள். தமிழில் ஒரு கதாநாயகனுக்கு ஒரு மானேஜர், ஒரு உதவியாளர், ஒரு டிரைவர் என இருப்பார்கள். ஹாலிவுட்டில் அனைத்தையும் நாமே செய்ய வேண்டும். பொருளாதார ரீதியில் பார்த்தால், அங்கே செலவு குறைவுதான். ஆனால், டாலர் என்பதால் அதிகமாக தெரியும். அனைத்தையும் திட்டமிட்டே தொடங்குகிறார்கள்.

‘டெவில்ஸ் நைட்’ படத்தில், அருங்காட்சியக மேற்பார்வையாளராக நடித்து இருக்கிறேன். எனக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் எல்லாம் தகராறுதான். கொஞ்சம் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். இங்கே நடிக்கும்போது எல்லா படங்களிலும் வேட்டி, சட்டை, பட்டாபட்டி டிரவுசர், கையில் ஒரு அரிவாள் கொடுத்து விடுவார்கள். எப்போதுதான் எனக்கு கோட்டு சூட் கொடுப்பீர்கள்? என்று கேட்டு இருக்கிறேன். அந்த ஆசை, ஹாலிவுட் படத்தில் நிறைவேறி இருக்கிறது.” இவ்வாறு நெப்போலியன் கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan