பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கு – மேலும் 2 பேர் கைது

பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கு – மேலும் 2 பேர் கைது

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மலையாள சினிமா நடிகை பூர்ணா, தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். கொச்சியில் உள்ள இவரது வீட்டுக்கு கடந்த மாதம் வந்த 4 பேர் பூர்ணாவை துபாய் தொழில் அதிபர் ஒருவர் பெண் பார்க்க வருவதாக கூறினர். அப்போது பூர்ணாவின் தாயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் பேசி பூர்ணாவின் செல்போன் எண் மற்றும் புகைப்படத்தை அவர்கள் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் பூர்ணாவை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், பெண் கேட்டு வந்த துபாய் தொழில் அதிபர் நான் தான் என்றும், எனக்கு அவசரமாக ரூ.1 லட்சம் வேண்டும் என்றும் மிரட்டும் தொனியில் பேசி உள்ளார். மேலும் அவரின் பேச்சில் சந்தேகமடைந்த பூர்ணா கொச்சி மரடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செரீப், ரபீக் உள்பட இதுவரை 10 பேரை கைது செய்தனர்.

 கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், மாடல் அழகிகள் உள்பட இளம்பெண்களிடம், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் மற்றும் நகை பறித்துள்ளனர். படப்பிடிப்புக்கு அழைத்து செல்வதாக கூறி இளம்பெண்களை பாலக்காட்டில் ஒரு ஓட்டல் அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும், பலரை ஏமாற்றி மோசடி செய்ததும் அம்பலமாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கோவையை சேர்ந்த நஜீப் ராஜா(வயது27), ஜாபர் சாதிக்(27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan