கன்னட நடிகர்- நடிகைகளுக்கு சிங்கம்-2 பட பாணியில் போதை பொருள் சப்ளை செய்யப்பட்டதாக நடிகை ராகிணி திவேதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும், பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். தற்போது நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவர், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ஆப்பிரிக்கா நாட்டு வாலிபர் லோயம் பெப்பர் சம்பாவை(வயது 33) கைது செய்துள்ளனர். அவர் சூர்யா நடித்த சிங்கம்-2 படப்பாணியில் ஆப்பிரிக்காவில் இருந்து போதை பொருட்களை கடத்திக் கொண்டு வந்து உள்ளூர் நபர்கள் மூலம் சப்ளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர், ரவிசங்கருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் .
கன்னட திரை உலகத்தினர் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு ரவி சங்கர் மூலமாக போதைப்பொருட்களை ‘சப்ளை’ செய்து வந்துள்ளார். இதுதவிர முக்கிய பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கும் லோயம் பெப்பர் சம்பா போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
Source: Malai Malar