Press "Enter" to skip to content

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை… 5 மீனவர்கள் படுகாயம்…

நாகையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ், கலர்புல் கழிவறையை கட்டிய பேரூராட்சி நிர்வாகம்.

தூய்மை இந்தியா திட்டம் :

திறந்தவெளியில் மலம் கழிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுகாதார சீர்கேற்றுடன் நோய் தொற்றும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க மத்திய அரசு கழிவறை இல்லா கிராமங்கள் இருக்கக் கூடாது என்ற இலக்கை நோக்கி  நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாய்லெட் 2.0 போட்டியை அறிவித்திருந்தது. அதன்படி பொதுக்கழிவறையின் முந்தைய நிலை குறித்த புகைப்படங்களும், அதனை பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைத்த சமீபத்திய புகைப்படங்களையும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து போட்டியில் களமிறங்கிய நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம்  செயல் அலுவலர் குகன் தலைமையில் இதற்காக சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து கலர்ஃபுல் கழிவறையை புனரமைத்தனர். கீழ்வேளூர் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பொதுக் கழிவறை கட்டிடத்தை வர்ணம் தீட்டிய ஆர்கிடெக் கல்லூரி மாணவர்கள், அங்கு சுவர்களில் அழகிய ஓவியங்களையும் வரைந்தனர்.

அனைவரும் பயன்படுத்தும் பொது கழிவறை:

 

பெரும்பாலான இடங்களில் ஆண், பெண் இருபாலருக்கு மட்டுமே கழிவறை உள்ளதை மாற்றி, திருநங்கைகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் அங்குள்ள பொது கழிவறையை கட்டி அசத்தியுள்ளனர்.இந்த பொது கழிவறையை திறந்து வைத்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அதனை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார்.
பொது கழிவறையில் பொத்தானை அழுத்தினால், பெண்களுக்கு என பிரத்தியேகமான நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம், கைகளை சுத்தம் செய்து கொள்ள தானியங்கி திரவ எந்திரம் பொருத்தப்பட்டுள்ளன.

பல்வேறு கழிவறையின் நிலையை கண்டு மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் காலகட்டத்தில், சர்வதேச தரத்தில் கீழ்வேளூர் பொது கழிவறையில், நாப்கின் முதல் பற்பசை, சோப்பு உள்ளிட்ட நறுமண திரவியங்கள் கிடைப்பதால், அதனைப் பார்க்கும் பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூக்கின் மேல் விரல் வைத்து வியந்து போகின்றனர்.

களத்தில் இறங்கிய பேரூராட்சி நிர்வாகம்:

நவீன கழிவறையில், பொருட்களை பெற பேமெண்ட். குறைகள் குறித்து புகார் தெரிவிக்க க்யூ ஆர் கோடு என அனைத்தும் கணினி மயமான மயமாக்கப்பட்டுள்ளதால், கல்லூரி மாணவிகள் திருநங்கைகள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற கழிவறைகளை மாவட்டம் தோறும் மக்கள் கூடும் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வெகுவாக பெண்களிடம் இருந்து எழுந்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பரிசு பெறுவது என்பது ஒருபுறம் முக்கியம் என்றாலும், மக்களின் சுகாதாரம் மட்டுமே எங்களுக்கு லட்சியம் என்ற நிலையை கருத்தில் கொண்டு கீழ்வேளூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கி, பொது கழிவறையை புனரமைத்துள்ள சம்பவம் நாகை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »