Press "Enter" to skip to content

மட்டன் பிரியாணியில் பூனைக்கறியா…? பிரியாணிப் பிரியர்களே உஷார்…!

தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட அஞ்சா நெஞ்சு கொண்ட அரசியல் தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூரும் விதமாக அவரைக் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் மனங்களில்..:

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஆண்களின் ஆதிக்கக் கூட்டத்திற்கு நடுவே நிமிர்ந்த நன்னடை பயின்றார் ஒரு பெண்மணி.  கோட்டையைப் பிடித்து கொடியேற்றிய அவரது நிஜப்பெயர் கோமளவல்லி. பின்னர் நாடறிந்த கம்பீரமான பெயர் ஜெயலலிதா.  கட்சியினர் அவரை அழைத்ததோ புரட்சித் தலைவி என்று, ஆனால் மக்கள் மனங்களில் நின்ற பெயர் அம்மா.  

வெற்றி மட்டுமே:

இதே நாளில் 75 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1948-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மைசூர் அருகே பிறந்தார் கோமளவல்லி.  பெயருக்கேற்ற கோமளமாய் வளர்ந்த ஜெயலலிதா திரைத்துறையில் மாணிக்கமாய் ஜொலித்தார்.  எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என்று அவர்கால ஜாம்பவான்களுடன் ஜோடி போட்ட கம்பீர நடிகை ஜெயலலிதா.  ஜெயம் என்றால் வெற்றி என்று பொருள்.  அந்த வெற்றியைச் திரைப்படத்தில் சுவைத்த ஜெயலலிதா, அரசியலுக்குள் கால் பதித்த கணம் முதல் தமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் வெற்றி மட்டுமே தேடிக் கொடுத்த லலிதையும் ஆனார்.

தொடர் வெற்றி:

தாய்நாடு, தாய்மண், தாய்மொழி என்று தாய்வழியே அனைத்தையும் தொழும் நம் தமிழ்ச் சமூகத்தில், மக்கள் மனம் வென்ற அம்மாவாய் 1991-ம் ஆண்டு ஐந்தாவது முதலமைச்சராக சிம்மாசனத்தில் அமர்ந்தார்.  அதன்பின் 2001, 2006, 2011, 2016 என நான்கு முறை முதலமைச்சராக சேவை செய்தார். 

தொண்டர் படை:

எம்.ஜி.ஆர் என்னும் அரசியல் ஜோதி பற்ற வைத்த ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் நெருப்பை, காட்டுத்தீ ஆக்கி, இருட்காலம் சேர விடாமல் வெளிச்சத்தைப் பாய்ச்சிய இரும்புப் பெண்மணி ஜெயலலிதா.  எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாக பிளவுற்றபோது தம் பெரும்பான்மையையும், மக்கள் மனத்தில் தமக்கான இடத்தையும் நிரூபித்து கட்சியைக் கட்டுக்கோப்பான இயக்கம் ஆக்கியவர் ஜெயலலிதா.  இன்றுவரை அதிமுகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பெரும் செல்வாக்கிற்கும், ஒருகோடி தொண்டர்ப் படை என்று சொல்லப்படும் பெருமைக்கும் உழைத்தவர் ஜெயலலிதா. 

 அதிமுகவை இந்திய அளவில் புகழ்பெறச் செய்ததில் இவரது பங்கு மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. 

சாணக்ய தந்திரி:

தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசுடன் பலமுறை கைகோர்த்து இணக்கமுடன் செயல்பட்ட ஜெயலலிதா, சில இடங்களில் முரண்பட்டு நின்று தமிழ்நாட்டின் தனியுரிமையைக் காத்ததும் நாடறிந்த வரலாறு.  இடம் பொருள் ஏவல் எனப்படும் மந்திரங்களின் மகத்துவம் அறிந்து செயல்பட்ட சாணக்ய தந்திரி ஜெயலலிதா.  தம் முழு வாழ்வையும் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்து திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் ஜெயலலிதா. 

முத்தான 10 திட்டங்கள்:

தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தை தம் ஒவ்வொரு அசைவிலும் சிந்தித்து செயலாற்றிய புதுமைப் பெண் ஜெயலலிதா.  அவர் பெண்களுக்காக செய்த முத்தான 10 திட்டங்கள் காலமுள்ள வரையில் அவரது பெயரைச் சொல்வன.  பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு திட்டம், பெண்களுக்கான உடல் எடை பரிசோதனை திட்டம்,அம்மா குழந்தைகள் நலப்பரிசு பெட்டகம், பாலூட்டும் தாய்மார்களுக்குத் தனியறை திட்டம், மகப்பேறு சஞ்சீவி திட்டம், சாதனை படைத்த பெண்களுக்கு வெற்றிப் பெண்மணி விருது வழங்கி கௌரவம் என இன்றிருக்கும் பல நலத்திட்டங்களை வழங்கிச் சென்ற மங்கையருள் மாணிக்கம் ஜெயலலிதா. 

விடாமுயற்சி:

அரசியல் மூலம் தமிழ் மக்களின் வாழ்க்கையில் எத்தனை புரட்சிகளை அவர் விதைத்தாரோ, அதே அளவு சர்ச்சைகளும் வழக்குகளும் அடக்குமுறைகளும் ஜெயலலிதாவை நோக்கி எய்யப்பட்டன.  ஆனால், அனைத்தையும் தம்முடைய வியூக மதியாலும், விடா முயற்சியாலும் முறியடித்தார் ஜெயலலிதா.  எதிரிகளும் வியக்கும் மேலாண்மைத் திறத்திற்குச் சொந்தக்காரர், தம் மனத்தை மட்டும் யாருமே அறியாத மர்மக் கடலாக்கி பொதுசேவை செய்தார். பின்னாளில் தம் மனம் போலவே மரணமும் மர்மங்கள் சூழ்ந்ததாக புகழுடம்பை நீத்தார். 

என்றும் வாழ்கிறார்:

தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் எத்தனையோ பெண்கள் தடம்பதித்து, விதை விதைத்துச் சென்றாலும், ஜெயலலிதாவுக்குப் பின் எழுந்த ஒவ்வொரு பெண் அரசியல்வாதியிடமும் அவர் சாயல் இருப்பது இன்றியமையாதது ஆகிவிட்டது.  ஜெயலலிதாவின் பெயரைக் காலம் மறக்கலாம், ஆனால் அம்மா என்னும் மந்திரம் மக்கள் மனங்களில் அவர்கள் வாழ்வு உள்ளளவும் நிலைத்து நிற்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதையும் படிக்க:    மயில்சாமியின் மரணம் குறித்து தவறான செய்தி அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை…. தந்தையின் இறப்பைக் குறித்து விளக்கம் அளித்த மகன்கள்!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »