Press "Enter" to skip to content

தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!!

மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.க. மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது, இன்றும் வரவேற்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.   

மேலும், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில், 100-ல் ஒரு விழுக்காடு கூட மகளிர் மசோதாவை நிறைவேற்றுவதில் மோடி அரசு காண்பிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

“பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ள அவர், 

“மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில், அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை, அதன் பேரில் 2029-ல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கும் இப்போதே சட்டம் நிறைவேற்றுவது தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாய்மாலம் என்றும் விமர்சித்துள்ளார்.  

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களவைப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து, என்றும் இந்த சூழ்ச்சி முளையிலேயே கிள்ளி எறிப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், தமிழ்நாட்டை வஞ்சிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு இப்போதே தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

“பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை பா.ஜ.க. அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் 

இதையும் படிக்க || “பாஜக குறித்து பொது வெளியில் பேசக் கூடாது” அதிமுக தலைமை உத்தரவு!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »