வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சியால் யமுனை சமவெளி பாதிப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம்

 வாழும் கலை அமைப்பு நடத்திய உலக கலாச்சார திருவிழா காரணமாக யமுனையின் வெள்ளச் சமவெளி பகுதி பாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், அபராதத் தொகையில் இருந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இன்று (வியாழன்) உத்தரவிட்டது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த ஆண்டு டெல்லியில் யமுனை ஆற்றங்கரையில் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்தினார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் யமுனையின் வெள்ளச் சமவெளி பகுதியில் பல்லுயிர் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் செய்தனர்.

இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் யமுனை கரையில் ஏற்படும் பல்லுயிர் சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் முதல்கட்டமாக ரூ.5 கோடி செலுத்த உத்தரவிட்டது.

யமுனை வெள்ளச் சமவெளியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஷஷி ஷேகர் தலைமையில் நிபுணர் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. உலக கலாச்சார திருவிழா காரணமாக யமுனையின் வெள்ளச் சமவெளி மிகமோசமாக பாதிக்கப்பட்டதாகவும், 13.29 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் இருக்கும் எனவும் அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் இதை ஏற்க முடியாது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என வாழும் கலை அமைப்பு கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி சுவதந்தர் குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறுகையில், ”வாழும் கலை அமைப்பு செலுத்திய அபராத தொகையில் இருந்து, யமுனை வெள்ளச் சமவெளியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அமைப்பு மீதி தொகையை செலுத்தியபின், டெல்லி மேம்பாட்டு ஆணையம் பணிகளை செய்ய வேண்டும்”  எனக் கூறினார்.

அதேசமயம் கூடுதல் அபராதம் எதையும் செலுத்துமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறவில்லை.

Source: The Hindu

English summary
The art of living by the Yamuna flood plains affected the structure of the programme: the National Green Tribunal

The art of living organisation due to the world cultural festival conducted by the Yamuna flood