தானேயில் நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

தானேயில் நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

தானே:

மராட்டிய மாநிலம் தானே நகரின் மையப்பகுதியான உல்லாஸ்நகரில் “மணப்புரம் கோல்டு ஹவுஸ்” என்ற நிதி நிறுவனம் உள்ளது. இந்தநிலையில், நேற்று காலை வழக்கம்போல், பணிக்கு வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஊழியர்கள் நிதி நிறுவன கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை ஆங்காங்கே வீசப்பட்ட நிலையில் கிடந்தன.

மேலும், லாக்கர் பகுதியில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதனால் பதறிப்போன ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

நிதி நிறுவன சுவரில் துவாரம்போட்டு, அதன் வழியாக மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து, 30 கிலோ தங்க நகைகளை அள்ளிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

பிரபல நிதி நிறுவனத்தில் அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source: Maalaimalar

Author Image
murugan