Press "Enter" to skip to content

கோவா: 161 பேருடன் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற விமானம் – 15 பயணிகள் காயம்

பனாஜி:

துபாயில் இருந்து இன்று அதிகாலை கோவாவுக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தட எண்: 9W 2374 கொண்ட விமானம், பனாஜி விமான நிலையத்தில் சில பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், அதிகாலை 5 மணியளவில் இங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டது.

அதில் 154 பயணிகளும், விமானிகள், பணிப்பெண்கள் என 7 பேரும் இருந்தனர். ஓடுபாதையில் வேகமெடுத்து உயரக்கிளம்பியபோது, நொடிப்பொழுதில் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம், பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை நோக்கி சறுக்கிச் சென்றது.

இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், முதலுதவி குழுவினரும் அந்த இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் உள்ள பயணிகளை அவசரமாக இறக்கும் ஏணி படிக்கட்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

அவசர பாதையின் வழியாக கீழே இறங்குவதற்கு உள்ளே இருந்த பயணிகள் முந்தியடித்து விமானத்தின் முன்பக்கத்தில் ஒரேநேரத்தில் குவிந்ததால், முன்பகுதி சற்றே சரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஓரிருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலுதவிக்கு பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் பனாஜி மற்றும் வாஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேதமடைந்த ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால், பிற்பகல் 12.30 மணிவரை கோவா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.