மோடி, மத்திய அமைச்சர்களை சந்திக்க படாதபாடுபடும் 'சசிகலா' நடராஜன்- திரும்பிகூட பார்க்காத டெல்லி!

மோடி, மத்திய அமைச்சர்களை சந்திக்க படாதபாடுபடும் 'சசிகலா' நடராஜன்- திரும்பிகூட பார்க்காத டெல்லி!

சென்னை: பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்கு மன்னார்குடி கோஷ்டியின் நடராஜன் மிக தீவிரமாக முயற்சித்து வருகிறாராம். ஆனால் பிரதமர் மோடியோ மன்னார்குடி கோஷ்டியை தாம் மட்டுமல்ல மத்திய அமைச்சர்கள் யாருமே சந்திக்க கூடாது என கறாராக சொல்லிவிட்டார் என்கிறது டெல்லி தகவல்கள்.

ஜெயலலிதா மறைந்தபோது அவரை உடலை சுற்றி நின்று கொண்டு தமிழக மக்களை மட்டுமல்ல டெல்லி அரசியல்வாதிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மன்னார்குடி கோஷ்டி. ஜெயலலிதாவால் ‘துரோகிகள்’ என அடையாளம் காட்டப்பட்ட மன்னார்குடி கோஷ்டியின் அத்தனை பேரும் ஆஜராகி இருந்தனர்.

அத்துடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது மரபுகளை மீறி மன்னார்குடி கோஷ்டி நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிமுகவையும் ஆட்சியையும் மன்னார்குடி கோஷ்டி கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு அதிதீவிரமாக இருந்து வந்தது.

இதனிடையே பிரதமர் மோடி மற்றும் 4 முக்கிய மத்திய அமைச்சர்களை எப்படியும் சந்தித்துவிடுவது என சசிகலாவின் கணவர் நடராஜன் படுதீவிரமாக முயற்சித்து வருகிறாராம். ஆனால் பிரதமர் மோடியோ தம்மை மட்டுமல்ல மத்திய அமைச்சர்கள் எவரையுமே மன்னார்குடி கோஷ்டி சந்திக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாகத்தான் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, முதல்வர் பன்னீர்செல்வத்தைத் தவிர வேறு யாருடனும் நாங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்தாராம். இதனால்தான் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே அதிமுகவின் எதிர்காலம் குறித்து பேட்டி கொடுத்த நடராஜன் இப்போது எதுவும் பேசாமல் அமைதி காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Source: OneIndia

Author Image
murugan