Press "Enter" to skip to content

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?: ராம மோகன ராவ் ஆவேச பேட்டி

சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, ராம மோகனராவ் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை பிரிவில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சில இருதய பரிசோதனைகள் முடிந்து தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 2-வது நாளாக நேற்று அவர் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் ராம மோகன ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இருவருக்கும், வருமான வரித்துறையினர் ‘சம்மன்’ அனுப்பி இருந்தனர்.

சம்மனை பெற்றுக்கொண்டு ஆஜராகாத ராம மோகனராவ் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதேபோல் அவருடைய மகன் விவேக்கும் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை.

இதனால் ராம மோகனராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவரை அங்கு கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கிடையில், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு ராம மோகனராவ் நேற்றிரவு 9 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர், ஒய்.பிளாக், 6-வது மெயின்ரோடு, முதலாவது தெருவில் உள்ள தனது வீட்டில் இன்று காலை ராம மோகன ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவில் மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட நான்தான் இப்போதும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் என்று குறிப்பிட்ட அவர், தனக்கு எதிராக சோதனை ‘வாரண்ட்’ ஏதுமின்றி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலக அறையிலும், அண்ணாநகர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகத்துக்குள் மத்திய துணை ராணுவப் படை நுழைந்திருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தன்னையும் தனது மனைவியையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் வீட்டுக்காவலில் அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்த அவர், தனக்கும் மணல் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

செய்திகளில் வந்ததுபோல் என் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயோ, கிலோ கணக்கான தங்கமோ பறிமுதல் செய்யப்படவில்லை என தெரிவித்த ராம மோகன ராவ், வெறும் ஒரு லட்சத்து சொச்சம் ரொக்கமும்,  தனது மனைவியிடம் இருந்த 40 சவரன் தங்க நகைகளும்தான் கைப்பற்றப்பட்டன என கூறினார்.

தன்னை சிலர் குறிவைத்திருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளருக்கே உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தமிழக மக்கள் பாதுகாப்பற்று இருப்பதாக உணர்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.