மாநில அரசு இருக்கா… ராம்மோகன் ராவ்  கேள்விக்கு ஓபிஎஸ் விளக்கம் தர திருமாவளவன் கோரிக்கை

மாநில அரசு இருக்கா… ராம்மோகன் ராவ் கேள்விக்கு ஓபிஎஸ் விளக்கம் தர திருமாவளவன் கோரிக்கை

சென்னை: ராம்மோகன் ராவ் வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றை வருமானவரித் துறையினர் சோதனை செய்தது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் கூறியதாவது:

தமிழக தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி என்ன நடந்துள்ளது என்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவர் அதிகார வரம்பை மீறி பேசுகிறார் என்று சொல்ல முடியாது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு தாக்குதல் என்று கூறியிருக்கிறார். ஒரு தலைமைச் செயலாளர் அறையை சோதனை செய்ய முதல்வரின் அனுமதியைப் பெற்றார்களா? இங்கே மாநில அரசு இயங்குகிறதா? என்ற கேள்வியை ராம்மோகன் ராவ் எழுப்பியிருக்கிறார். இது முக்கியமான கேள்வி.

மாநில அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டிலே இயங்கிக் கொண்டிருக்கிறதா? செயல் இழந்து கிடக்கிறதா என்றக் கேள்வியைத் தொடர்ந்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக நியமிக்கப்பட்ட நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த தலைமைச் செயலாளர் இந்தக் கேள்வியை எழுப்பி இருப்பது மிக முக்கியமானது.

ராம்மோகன் ராவ் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருக்கிற போதே தலைமைச் செயலகத்தில் வருமானவரிச் சோதனை நடைபெற்றுள்ளது. இதற்கு வருமானவரித் துறைக்கு அதிகாரம் இருக்கலாம். அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் நடைமுறை படுத்துவதற்கு ஒரு முறை இருக்கிறது. அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

மேலும், சோதனை வாரண்டில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை என்று ராம்மோகன் ராவ் சொல்லி இருக்கிறார். என் பெயர் இல்லாத போது என் அறைக்கு வருமானவரித் துறையினர் எப்படி நுழையலாம். துப்பாக்கி முனையில் என் மகன் வீட்டிற்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் மிரட்டி இருக்கிறார்கள். இதுவரை இதுபோல் நடந்திராத ஒன்று என்று ராம்மோகன் ராவ் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எனவே, தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஒருவர், இந்தக் கேள்வியை எழுப்பி இருக்கிற போது, தமிழக அரசு உடனடியாக இதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Source: OneIndia

Author Image
murugan