தமிழக சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க  ராம மோகன் ராவ் முயற்சி – தமிழிசை குற்றச்சாட்டு

தமிழக சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க ராம மோகன் ராவ் முயற்சி – தமிழிசை குற்றச்சாட்டு

சென்னை: தலைமைச் செயலாரளாக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன ராவ், வருமானவரித்துறையினர் வைத்திருந்த சர்ச் வாரண்டில் என்னுடைய பெயர் இல்லை. என்னுடைய மகன் பெயர் மட்டுமே இருந்தது என்று குறிப்பிட்டார்.

வருமான வரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களின் துணையுடன் என்னை 26 மணி நேரம் வீட்டு காவலில் வைத்தனர். அம்மா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அதிமுக தொண்டர்கள் என்ன செய்கிறார்கள், அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்றும் கேட்டார். மொத்தத்தின் தான் உத்தமன் என்றும் தன் மீது அபாண்டமாக யாரோ பழி போடுகிறார்கள் என்பது போலவும் பேட்டி கொடுத்தார் ராம மோகன் ராவ். அரசியல்வாதிகள் போலவே பேசினார் ராம மோகன் ராவ்.

ராம மோகன் ராவின் பேட்டி அரசியல் கட்சி தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடையே அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து கருத்து கூறிய தமிழிசை சவுந்தரராஜன். ராம மோகன் ராவின் உயிருக்கு ஆபத்து என்றால் அவருக்கு நெஞ்சுவலியினால் வந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை

தன் மீதான குற்றச்சாட்டை ராம மோகன் ராவ் திசை திருப்ப முயற்சி செய்கிறார் என்றும், ராம மோகன் ராவின் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார் என்றும் தமிழிசை தெரிவித்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய போது, ஆஜராகாமல் மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். இப்போது பேட்டியளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இப்படி பேட்டி கொடுப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க ராம மோகன் ராவ் முயற்சி செய்வதாக தமிழிசை சவுந்தராஜன் குற்றம் சாட்டினார்.

குற்றவாளி ராம மோகன் ராவ்

தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்ததன் மூலம், தான் குற்றவாளி என்று அப்பட்டமாக ஒத்துக்கொண்டுள்ளார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென பேட்டி கொடுத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், தீரன் ஆகியோருக்கு நன்றி சொன்னது ஏன் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சோதனை நடத்தலாம்.

உரிமை கிடையாது

தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இவர் கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதை முதல்வரோ, எதிர்கட்சி தலைவரோ தவறு என்று கூறவில்லை. அரசியல் அமைப்பு சட்டம் பற்றி இவர் எப்படி பேசலாம். இவருக்கு என்ன உரிமை உள்ளது. தலைமை செயலாளர் இவர்தான் என்று எப்படி கூறலாம்? இவருக்கு அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு அவமரியாதை

தமிழகத்தில் ஊழலை துடைத்து எடுப்பதற்கான முதல் முயற்சி இது. ஜெயலலிதா வைத்திருந்த நம்பிக்கைக்கு புறம்பாக இவர் நடந்து கொண்டு, இன்றைக்கு அவரால் பதவி கொடுக்கப்பட்டவர் என்று கூறுவதா? இவர் ஜெயலலிதாவை அவமரியாதை செய்கிறார். விட்டால் எல்லா தவறுகளுக்கும் ஜெயலலிதாதான் காரணம் என்று கூறிவிடுவார்.

டிஸ்மிஸ் செய்யுங்கள்

இவர் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கப் பட வேண்டியர் இல்லை, இவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டியவர். பாஜகவையோ, மத்திய அரசையோ யாரும் குற்றம் சொல்ல முடியாது. ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் ஆதரவு என்றும் உள்ளது என்றும் கூறினார். அரசு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியது எப்படி? என்ன பின்புலம் உள்ளது என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

Source: OneIndia

Author Image
murugan