விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் விவசாயி மகாலிங்கம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் ”தமிழகத்தில் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக அவர்கள் நலனில் மாநில அரசு உரிய அக்கறை செலுத்தவில்லை. குறிப்பாக, காவிரிப் பாசனப் பகுதியில் குறுவை சாகுபடி பலன் தராத நிலையே நீடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசும் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளுமே போதிய நீர் ஆதாரமின்றியும், உரிய நிவாரணமின்றியும் பரிதவித்து வரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் ஏறத்தாழ 35 விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்களால் உயிர்ப் பலியாகியுள்ளனர்.

விவசாயிகளின் வாழ்க்கை மிக மோசமான துன்பத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விவசாய அமைப்பினரும் விவசாயத் தொழிலாளர் அமைப்பினரும் போராடி வருகிறார்கள். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசையும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில், காவல்துறையின் தடுப்புப் முயற்சிக்கிடையே முத்துப்பேட்டை ஒன்றியம் கோவிலூரைச் சேர்ந்த 45 வயது விவசாயி மகாலிங்கம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு, அதிகாலை 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவரது உடலைக் கிடத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதி பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு மேற்கொள்ளவில்லை.
விவசாயிகளின் பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும்
விவசாயிகளுடன் திராவிட முன்னேற்றக் கழக விவசாய அமைப்பினர் இணைந்து செயல்பட்டு, அவர்களின் போராட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டத்தில் மரணமடைந்த விவசாயி மகாலிங்கத்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இத்தகைய இறப்புகளுக்கு மாநில அரசும் மத்திய அரசும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். விவசாயிகளின் தொடர் போராட்டமும், அவர்களின் மரணமும் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source: OneIndia