சேகர் ரெட்டி உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை:

சென்னை தி.நகரை சேர்ந்த சேகர் ரெட்டி வீட்டில் கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது, அவரது வீட்டில் ஏராளமான பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் ரூ.34 கோடிக்கு அண்மையில் வெளியான ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் இருந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் கூட்டுச் சதி, மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக் கேட்டு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, கைதானவர்களும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயலட்சுமி சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டிசம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Source: Maalaimalar