20 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி:

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றுவரும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறி செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ஒரு ஆய்வு கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொண்டு நிறுவனங்கள் குறித்து வெளியுறவுத்துறை ஒரு ஆண்டாக விசாரித்து  உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்தது.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் 33 ஆயிரம் தொண்டு நிறுவனங்களில் 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக செயல்பட்டு வந்ததும் 13 ஆயிரம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சட்டப்படி செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

எனவே முறைகேடாக செயல்பட்டு வந்த 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது உள்ள 13 ஆயிரம் தொண்டு நிறுவனங்களில் 3 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பித்து உள்ளன.

மேலும் 2 ஆயிரம் புதிய தொண்டு நிறுவனங்களும் உரிமம் கேட்டு விண்ணப்பித்து உள்ளன என்றார்.

Source: Maalaimalar