ஜெயலலிதா நினைவிடத்தில் இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு !

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் கடந்த 6-ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் மனைவி குணசுந்தரி (32), எம்ஜிஆர் நினைவிடத்திற்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வந்தார். பின்னர் அங்கு ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு புல்தரை வழியாக நடந்து வந்தார்.

அப்போது ஜெயலலிதா நினைவிடத்திற்கு புல் தரை வழியாக மின்சார வயர் சென்று கொண்டிருந்தது. இதை எதிர்பாராதவிதமாக குணசுந்தரி மிதித்துள்ளார். உடனே, மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் பாதுகாப்பு போலீசார் குணசுந்தரியை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Source: OneIndia