தலைமைச் செயலாளர் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை: வெங்கையா நாயுடு

தலைமைச் செயலாளர் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை: வெங்கையா நாயுடு

சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை செய்தது. இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ராம மோகனராவின் வீட்டை தொடர்ந்து தலைமைச் செயலகத்திலும், அவரது அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து ராம மோகன்ராவ் தனது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ராம மோகன ராவ் இன்று அளித்த பேட்டியில் மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

இந்நிலையில்,  ராமமோகன ராவ் வீட்டில் சோதனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெங்கையா நாயுடு கூறுகையில்:-

இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். ராம  மோகனராவின் பொறுப்பற்ற கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரை எனக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கருத்துக்களை அவர் பேச வேண்டாம் என்று அறிவுருத்துகிறேன். இல்லையென்றால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறிவிடும்.

அவரது வீட்டில் இருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றால் சட்டம் இருக்கிறது. இந்திய அரசு அவரை நீக்கம் செய்யவில்லை. புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டதை செய்தி தாள் மூலம் தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Maalaimalar

Author Image
murugan