Press "Enter" to skip to content

ராமமோகன ராவ் பேட்டியின் பின்னணியில் இருப்பது யார்-யார்?: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

சென்னை:

ராமமோகன ராவ் பேட்டி குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட பேட்டி. இதன் பின்னணியில் யார்?, யார்? இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொல்லி அரசியல் அமைப்பு சட்டத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார். அரசு செயலாளர்களுக்கும், கலெக்டர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிறார். குற்றம் செய்த ஒருவர் தனக்கு நிகராக மற்ற அதிகாரிகளையும் ஒப்பிட்டு பேசுவது அரசு நிர்வாகத்தையே அவமானப்படுத்துவதாகும்.

தானே இன்று தலைமைச் செயலாளர் என்று சொல்லும் ராமமோகன ராவுக்கு தமிழக அரசு தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், தலைமைச் செயலாளர் பதவி வகித்தவர் ஒரு அரசியல்வாதி போல் பேசி அ.தி.மு.க., பா.ஜ.க. என்று கட்சிகளை இழுக்கலாமா?. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி இருக்கிறார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இதைவிட கடுமையாக தண்டித்து இருப்பார். ஆனால், இந்த சோதனையை அவர் அனுமதித்து இருக்கமாட்டார் என்று அவரை களங்கப்படுத்துவதோடு தூண்டிவிடும் விஷயங்களில் ஈடுபட்டுள்ளார்.

இதுபோன்ற தவறுகள் நடக் கக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. உதயமானது. தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தவர் தான் ஜெயலலிதா. மறைந்த பிறகு அவரை அவமானப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது. இந்த நடவடிக்கையை பார்த்து அ.தி.மு.க.வினரே சந்தோஷப்பட்டு இருப்பார்கள். குழப்பத்தை ஏற்படுத்த தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டுள்ள ராமமோகன ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு பரிகாரம் வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கலாம். ஆனால், தவறு செய்த தனக்கு துணையாக மற்றவர்களும் வர வேண்டும் என்று தூண்டி விடுகிறார். மத்திய ரிசர்வ் போலீசார் எப்படி வரலாம் என்கிறார்?. அதை கேட்க இவர் யார்?. மத்திய ரிசர்வ் போலீசார் வரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது யார்?. தவறான மனிதன் தனது தவறை மறைக்க தலைமை செயலகத்தையும் பயன்படுத்த முடியும் என்பது தெரியும்போது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இதனால், அரசுக்கும், நிர்வாகத்துக்கும் அவமானம் கிடையாது. இது தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட அவமானம். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் அரசுக்கு அவமானம்.

வருமான வரித்துறையின் சோதனைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் என்ன தொடர்பு?. அது தனித்து இயங்கும் துறை. அவர்களுக்கு கிடைக்கும் தகவல்படி சோதனை நடத்துகிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள். சோதனை நடக்கும்போது வீட்டுச் சிறை மாதிரி தான் வைத்திருப்பார்கள். சும்மா சுதந்திரமாகவா அலைய விடுவார்கள்?. யார் வீட்டில் சோதனை நடந்தாலும் இப்படித்தான் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமமோகன ராவ் தான் ஓர் குற்றவாளி என்பதை தெள்ளத்தெளிவாக பேட்டி மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார். யாரும் சட்டத்திற்கு மேல் கிடையாது. எந்த சட்டம் இவர் தலைமைச் செயலாளராக உதவியதோ, அதே சட்டத்தை இவர் உதாசீனப்படுத்தி இருக்கிறார்.

மாநில மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வதற்கு இவர் யார்?, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்-அமைச்சர் இருக்கும்போது இவருக்கு என்ன அக்கறை?. மத்திய ராணுவம் வந்தது தவறு என்கிறார். குற்றம்சாட்டப்பட்டு, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு இப்படி அசட்டுத் துணிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் காவல் துறையை நிர்வகித்து வரும் இவர் எப்படி சோதனைக்கு அனுமதித்திருப்பார்?. அதனால் மத்திய ராணுவம் வந்ததில் எந்தத் தவறும் இல்லை.

ஆணவத்தோடு அவர் சொல்கிறார், இன்னும் நான் தான் தலைமைச் செயலாளர் என்று. ஆக விதிமுறைகளையும், வழிமுறைகளையும் அப்பட்டமாக மீறியிருக்கிறார். அவர் மீது முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். மொத்தத்தில், தமிழகத்தில் உள்ள அமைதியான சூழல் கெடும் அளவுக்கு அவரின் பேச்சு உள்ளது மட்டுமல்ல, ஓர் தவறான நடவடிக்கையின் மூலம் ஓர் தவறான முன்உதாரணமாக அவர் திகழ்கிறார் என்பதே உண்மை. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற பொறுமை கூட ஓர் அதிகாரிக்கு இல்லாதது வியப்பாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »