புதிய நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்: ஓவர்டைம் பார்க்க தொழிலாளர்கள் மறுப்பு

புதிய நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்: ஓவர்டைம் பார்க்க தொழிலாளர்கள் மறுப்பு

சல்போனி:

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு கடும் பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஆகியும் வங்கிகளுக்கு போதிய அளவுக்கு புதிய 500 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லை.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு புதிய 500 ரூபாய் நோட்டு அனுப்பப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்த போதும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு நேற்று வரை புதிய 500 ரூபாய் நோட்டுகள் போதிய அளவில் வந்து சேரவில்லை.

பெரும்பாலான வங்கிகளில் ரூ.2,000 ஒரே நோட்டாக கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் அவற்றை மார்க்கெட்டுகளில் மாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், வங்கி கணக்கில் பணம் எடுக்க கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்திய பிறகும், வங்கிகளில் பண தட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவே பணம் தருகின்றனர்.  இதனால் வங்கி கிளைகளின் முன்பு கூட்டம் குறையவில்லை.

இதனையடுத்து, பண தட்டுப்பாட்டை நீக்க விரைவாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டுமென கருதி, அச்சடிப்பு பணியை இருமடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாசிக் மற்றும் தேவாஸ் அச்சகங்களில் 500 ரூபாய் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி மற்றும் மைசூருவில் ரூ.2000 மற்றும் ரூ.100 நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது.  

இந்நிலையில், சல்போன் அச்சகத்தில் பணி புரியும் தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் கூடுதல் நேரம்(ஓவர்டைம்) பணிபுரிய முடியாது என்று தங்களது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. வேலைக்கு உரிய ஒன்பது மணி நேரம் மட்டுமே பணி புரிய முடியும் என்று அவர் திட்டவட்டமாக கூறினர்.

இது தொடர்பாக பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு அச்சிடும் நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர் பணிச்சுமையால் கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் தொழிலாளர்கள் தொடர்ந்து விடுமுறை எடுத்து வருவதாக நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் அச்சடிக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள் கூடுதலாக 3 மணி நேரம், அதாவது 12 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Author Image
murugan