எங்கள் கட்சியின் வங்கி கணக்கில் மட்டும் ஏன் சோதனை – மற்ற கட்சிகள் என்ன ஆச்சு?: மாயாவதி கேள்வி

எங்கள் கட்சியின் வங்கி கணக்கில் மட்டும் ஏன் சோதனை – மற்ற கட்சிகள் என்ன ஆச்சு?: மாயாவதி கேள்வி

லக்னோ:

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமலாக்கப் பிரிவு திங்களன்று கண்டுபிடித்தது.

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் டெல்லி கிளையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் பெயரிலான கணக்கிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ரூ.1.43 கோடி செலுத்தப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாயாவதி கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்குகளில் மட்டும் ஏன் சோதனை நடைபெற்றது, மற்ற கட்சிகளில் ஏன் நடத்தப்படவில்லை என்று மாயாவதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அந்த பணம் கட்சியுடையது. கட்சியின் நடவடிக்கைக்காக வங்கியில் விதிமுறைகளின் படி செலுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு பகுஜன் சமாஜ் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமலாக்க துறையை தவறாக பயன்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டினார்.

Source: Maalaimalar

Author Image
murugan