Press "Enter" to skip to content

கேரளாவில் மந்திரிகளின் உதவியாளர்கள் யாரிடமும் வெகுமதி பெறக்கூடாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது.

இவரது அரசில் இடம் பெற்றுள்ள மந்திரிகளின் உதவியாளர்கள், மந்திரிகளை சந்திக்க வருவோரிடம் இருந்து வெகுமதி பெறுவதாகவும், சிலர் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பரிசாக பெற்றுக் கொள்வதாகவும் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு புகார்கள் வந்தன.

புகார்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து பினராயி விஜயன், அனைத்து மந்திரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூறப்பட்டிருப்பதாவது:-

கேரள மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளின் உதவியாளர்கள், பி.ஏ.க்கள் யாரும் மந்திரிகளை சந்திக்க வரும் யாரிடமும் கைநீட்டக் கூடாது. அவர்களிடம் இருந்து எந்த பொருளையும் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அது உதவியாளருக்கு வழங்கப்பட்ட வெகுமதியாகவே கருதப்படும்.

மேலும் ஒரு மந்திரியின் உதவியாளர், இன்னொரு துறையில் எக்காரணமும் கொண்டும் தலையிடக் கூடாது.

அரசு துறைகளின் முடிவுகளில் அரசியலுக்காகவோ அல்லது தனிநபருக்காகவோ எந்த சலுகையும், யாருக்கும் காட்டக்கூடாது. யாருக்கேனும் இவ்வாறு செய்தால், அதனை சந்தேக கண்கொண்டுதான் பார்க்க தோன்றும். சந்தேகமே ஒரு நோயாக மாறி விடக்கூடாது.

மந்திரிகளை சந்திக்க வருவோரிடம், உதவியாளர்கள் பொறுமையுடன் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். மந்திரிகளும், தங்களின் பார்வைக்கு வரும் கோப்புகளை உடனுக்குடன் பார்வையிட்டு அனுப்ப வேண்டும். எந்த நிலையிலும் கோப்புகள் தேங்கக்கூடாது. விரைவாக முடிவுகள் எடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »