அடடே! பிரமாதம்… எம்ஜிஆர், ஜெ.வை தோற்கடித்து பட்டையை கிளப்பும் 'சின்னம்மா'!

அடடே! பிரமாதம்… எம்ஜிஆர், ஜெ.வை தோற்கடித்து பட்டையை கிளப்பும் 'சின்னம்மா'!

சென்னை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் போயஸ் கார்டன் பங்களாவில் நாள்தோறும் ‘நாடக காட்சிகளை’ அரங்கேற்றி வருகிறார் சசிகலா. தம்மை சந்திக்க அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளிகளுடன் தரையில் அமர்ந்து பேசி ‘கனிவுடன்’ கோரிக்கைகளை கேட்டு அமர்க்களப்படுத்தியிருக்கிறார் சசிகலா.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் பங்களா, மன்னார்குடி கோஷ்டியால் அழைத்துவரப்படும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. ஜெயலலிதா எனும் மாபெரும் அரசியல் ஆளுமை மறைந்துபோய்விட்டார் என்ற துயரம் எவர் முகத்திலும் இல்லை.

சடங்குக்காக ஜெயலலிதா படத்தை வைத்து அதன் முன்னர் நின்று அமைதிகாத்துவிட்டு நகர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.. ஊடகங்களில், அரசியல் கூட்டங்களில் எதுவுமே வாய்திறக்காத சசிகலாவை அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக்கியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு நாள்தோறும் இப்படியான’நாடகங்களை’ நடத்துகிறது மன்னார்குடி கோஷ்டி.

இதில் நேற்று புதிய அவதாரத்தை வெளிப்படுத்தினார் சசிகலா. தம்மை சந்திக்க அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிலருடன் தரையில் அமர்ந்து பேசினார்.. அவர்களுடன் கைகுலுக்கினார்.. பெண் ஒருவரின் கைகளைப் பிடித்து அன்பாக ‘குறை’களை கேட்டறிந்தார் என்கிற படங்களை அதிமுக வெளியிட்டுள்ளது.

சின்னம்மா அவர்களை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவர்களுடன் உட்கார்ந்து நலம் விசாரித்தார் சின்னம்மா அவர்கள். pic.twitter.com/l38KdmCcxq

— AIADMK (@AIADMKOfficial)

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழை மக்களுடன் இணைந்து இருக்கும் புகை படங்கள் காலத்துக்கும் பேசப்படுவையாக இருக்கின்றன.. தம்மையும் ஒரு எம்ஜிஆர், ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு சசிகலாவை ஆட்டுவிக்கும் மன்னார்குடி கோஷ்டியின் நாடகங்களைப் பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது.

Source: OneIndia

Author Image
murugan