சவுதியில் நடந்த ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விழா

ரியாத்: சவுதி அரேபியா ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விழா கடந்த 17.12.2016 சனிக்கிழமை அன்று மாலை ரியாத் மதீனா சூப்பர் மார்க்கெட் விழா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் திரு கலியமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொருளீட்டப் புலம் பெயர்ந்தோருக்கான சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்திய சர்வதேச பள்ளி மாணவ மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஷேக் முஹமது ஷாஜஹான் தலைமை தாங்கினார். இணை செயலாளர் திரு.வேலுமணி வரவேற்புரை வழங்கினார். இந்தியத் தூதரகத்தின் முதன்மை அதிகாரிகள் திரு. அனில் நோட்டியால் மற்றும் திரு. ராஜமாணிக்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சவுதி அரேபியாவிற்கு வந்து இன்னல்படும் தமிழர்களுக்கு உதவி செய்பவரும், இறந்து விட்ட தமிழர்களின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைத்தல், சிறையில் இருக்கும் தமிழர்களை மீட்டல் போன்ற உதவிகளை செய்து வருபவரும், 2015 சென்னை வெள்ளத்தின் துயர் துடைப்பு பணியில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக சென்னை சென்று களப்பணி ஆற்றியவருமான ரியாத்தின் சமூக ஆர்வலராக அறியப்படும் திரு ஜமால் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Literary festival held in Riyadh

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சமுதாய சேவையாற்றியதற்காக ஜனாதிபதி விருதுபெற்ற சமூக ஆர்வலர் திரு .ஷிஹாப் கொட்டுக்காடு மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ரியாத் மண்டல மேலாளர் திரு. குண்டன் லால் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். திரு. மஸ்தான் நன்றியுரை கூறினார்.

விழாவின் முடிவில் சவுதி அரேபியா, இந்தியா தேசிய கீதத்தை இந்திய சர்வதேச பள்ளி மாணவர்கள் வாசித்தளித்தனர். விழாவின் அனுசரணையாளர்களை சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு திரு. ஜாபர்சாதிக் சிறப்பு செய்தார். முன்னாள் ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்தளித்தார்.

விழாவின் முழு ஒருங்கிணைப்பும் ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள்தலைவர் திரு. அஹமது இம்தியாஸ் அவர்கள் செய்திருந்தார். ரியாத் வாழ் இதர அமைப்புகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், மாணவர்களும், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Source: OneIndia