வங்கியில் பணம் எடுக்க கியூவில் நின்ற கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது: உ.பி. அரசு நிதி உதவி

வங்கியில் பணம் எடுக்க கியூவில் நின்ற கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது: உ.பி. அரசு நிதி உதவி

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ஜின் ஜாக் நகரில் வசிப்பவர் சர்வேசா தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் செலவுக்கு பணம் எடுப்பதற்காக அங்குள்ள வங்கிக்கு சென்றார்.

வங்கியில் ஏற்கனவே கூட்டம் அதிகம் நின்றிருந்தது. சர்வேசா தேவியும் அவர்களுடன் வரிசையில் நின்றிருந்தார். நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்தார்.

அப்போது திடீர் என்று சர்வேசா தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை உடனே அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த செய்தி உத்தரப்பிர தேச மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

வங்கியில் கியூவில் நின்ற போது குழந்தை பெற்றதால் அந்தப் பெண்ணுக்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்- மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இதற்கான காசோலை உடனடியாக சர்வேசா தேவியிடம் வழங்கப்பட்டது.

ஏற்கனவே வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக கியூவில் நின்ற போது யாராவது இறந்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்- மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்து இருந்தார். தற்போது கர்ப்பிணிக்கும் வழங்க உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Author Image
murugan