போலி கணக்குகள் மூலம் ரூ.34 கோடியை மாற்ற முயற்சி: தனியார் வங்கி மேலாளர் கைது

போலி கணக்குகள் மூலம் ரூ.34 கோடியை மாற்ற முயற்சி: தனியார் வங்கி மேலாளர் கைது

டெல்லி:

பிரதமரின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பலர் அவற்றை வெளிநபர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மாற்றி வருகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில், டீக்கடைக்காரரின் வங்கி கணக்கில் 10 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளதாகவும், கால் டாக்சி டிரைவரின் கணக்கில் 8 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவ்வகையில், பல தனியார் வங்கிகள் போலி கணக்குகளை ஆரம்பித்து, அவற்றின்மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன. இத்தகைய பணப்பரிமாற்றத்துக்கு குறிப்பிட்ட ஒருதொகை கமிஷனாக கிடைப்பதால் தனியார் வங்கி ஊழியர்களில் சிலர் இந்த முறைகேடுகளை ஆதரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 9 போலி கணக்குகளில் சுமார் 34 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வங்கியில் பணியாற்றும் இருவரை சமீபத்தில் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலி கணக்குகளை தொடங்கவும், அவற்றின் வழியாக கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் செய்யவும் உதவிய அந்த வங்கியின் கே.ஜி. மார்க் கிளை மேலாளரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

Source: Maalaimalar

Author Image
murugan