புதுவையில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு

புதுவையில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு

புதுச்சேரி:

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என சட்ட விரோதமாக அறிவித்து நாட்டில் மறைமுகமாக ஒரு பொருளாதார நெருக்கடி அவசர நிலையை பிறப்பித்து இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

மத்திய அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார அவசர நெருக்கடி நிலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு துறைமுக மைதானத்தில் நடக்கிறது. மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.

கட்சியின் மாநில நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், செல்வ.நந்தன், அரிமாத்தமிழன், பொன்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வரவேற்கிறார்.

மாநாட்டில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், புதுவை மாநில செயலாளர் விசுவநாதன் ஆகியோர் பேசுகின்றனர்.

மாநாட்டில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள நிர்வாகிகள், கட்சியின் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவையில் குவிய தொடங்கி உள்ளனர்.

மாநாட்டையொட்டி புதுவை நகர பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Maalaimalar

Author Image
murugan