அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வந்த சசிகலா புஷ்பா கணவர் மீது தாக்குதல்

சென்னை:

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டன் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தின்போது, ஜெயலலிதாவின் மிக நெருக்கமான தோழியாக இருந்த சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும்படி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 
இதற்கிடையில், சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்யக்கூடாது எனக்கோரி, ஜெயலலிதாவால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் நீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு, சசிகலா புஷ்பாவும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியானதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதற்காக, வேட்புமனு தாக்கல் செய்ய, அவர் இன்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளார் என தகவல் இன்றுகாலை பரவியது.

இதையடுத்து, சென்னை காவல்துறை இணை ஆணையர் மனோகரன் தலைமையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கட்சி தொண்டர்களும் ஏராளமான அளவில் குவிந்திருந்தனர்.

இந்த நிலையில், அங்குவந்த சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களை கண்ட அ.தி.மு.க. தொண்டர்களில் சிலர் ஆவேசம் அடைந்தனர். போலீஸ் வளையத்தையும் மீறி லிங்கேஸ்வர் மற்றும் அவருடன் வந்தவர்களை அவர்கள் தாக்கினர்.

இதில் சசிகலா புஷ்பா கணவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த வக்கீலையும் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சசிகலா புஷ்பாவின் கணவரை மீட்ட போலீசார், அவரை ஒரு வேனில் ஏற்றிச்சென்று  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Maalaimalar