சசிகலா ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல்-சசிகலா புஷ்பா கணவர் படுகாயம்:அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு!

சசிகலா ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல்-சசிகலா புஷ்பா கணவர் படுகாயம்:அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதில் மன்னார்குடி கோஷ்டி தீவிரமாக இருக்கிறது.

ஆனால் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கும் சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று பிற்பகல் தகவல் பரவியது. இதையடுத்து வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். மேலும் குண்டு குண்டாக பலரை கேட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.

வீடியோ

#WATCH: Suspended AIADMK MP Sasikala Pushpa’s lawyer attacked outside party office by AIADMK workers in Chennai. pic.twitter.com/u10t63TmzX

— ANI (@ANI_news)

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரனும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தனர். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட சசிகலா ஆதரவாளர்கள் கும்பல் அவரை சூழந்து கொண்டு அடித்து உதைத்தது. சரமாரியாக விழுந்த அடியைத் தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.

ஆனாலும் விடாத அந்தக் கும்பல் இருவரையும் பிடித்து இழுத்து அடித்தபடியே ஓடியது. போலீஸார் தலையிட்டு காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதில் லிங்கேஸ்வரனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் அய்யோ, அம்மா என்று அலறியபடி ஓடினார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.

அதேபோல சசிகலா புஷ்பாவின் வக்கீலும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார். அதிமுகவினரின் இந்த கொலை வெறித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source: OneIndia

Author Image
murugan