டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜல் நியமனம்!

டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜல் நியமனம்!

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் உள்துறை செயலர் அனில் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ஆளுநராக இருந்த நஜீப் ஜங்குக்கும் முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் கேஜ்ரிவாலுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் நஜீப் ஜங்.

இம்மோதல் 2 ஆண்டுகாலம் நீடித்த நிலையில் திடீரென நஜீப் ஜங் தம்முடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்குப் பின்னர் தாம் ஆசிரியராக பணியாற்றுவேன் என கூறியிருந்தார் நஜீப் ஜங்.

இதையடுத்து டெல்லி யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்தது. இப்பதவிக்கு உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிசி, முன்னாள் உள்துறை செயலர் அனில் பைஜல் மற்றும் டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் அஜய் ராஜ் சர்மா ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

இவர்களில் தற்போது அனில் பைஜல் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1969-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உள்துறை செயலராக பணியாற்றியவர். டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார் அனில் பைஜல். விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேசனிலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார் அனில் பைஜல்

Source: OneIndia

Author Image
murugan