தமிழக மீனவனின் ஓட்டு முக்கியம், உயிர் முக்கியமில்லையா? – சீமான் கேள்வி

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் மீது இம்மாதிரியான துப்பாக்கிச் சூடுகள், திட்டமிட்டே நடத்தப்படுகிறது. நெடுவாசலில் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக ஏன் இருக்கக் கூடாது?

துப்பாக்கி சூடு நடத்தபட்டு இத்தனை நேரமாகியும் பிரதமர் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன்? கேரள மீனவர்கள் மீது இத்தாலி மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி அவர்கள் இறந்த போது எடுத்த நடவடிக்கையைக் கூட ஏன் இப்போது எடுக்கவில்லை?

தமிழனின் ஓட்டு வேண்டு. ஆனால், அவன் உயிர் முக்கியமில்லை என்றுதானே பிரதமர் நினைக்கிறார்.

பாகிஸ்தான் மீனவர்கள், இந்திய மீனவர்களை கொலை செய்திருந்தால், அமைதியாக இருந்திருப்பாரா? ஏன் தமிழனின் உயிரை மட்டும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் துச்சமாக நினைக்கிறது மத்திய அரசு?.

இவ்வாறு சீமான் சாடியுள்ளார்.

Source: OneIndia