இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் இரவு 8 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த டிட்டோ என்பவரது விசைப் படகு மீது துப்பாக்கியால் சுட்டனர்.

அந்த படகில் இருந்த பிரிஜ்ஜோ (வயது21) என்ற மீனவர் மீது குண்டுகள் பாய்ந்தது. ஒரு குண்டு அவர் கழுத்தை துளைத்தது. படகு உள்ளேயே அவர் உயிரிழந்தார். சரோண் (24) என்பவர் வலது கால், இடது கை போன்ற வற்றில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் விட்டு, விட்டு விசைப்படகுகளுடன் கரைக்கு திரும்பினர். துப்பாக்கி சூட்டில் பலியான பிரிஜ்ஜோவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நள்ளிரவு முதல் மீனவர்கள் திரண்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் நடராஜன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

அவர்கள் பலியான மீனவர் பிரிஜ்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இன்று காலையும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பிரிஜ்ஜோவின் உறவினர்களும், மீன வர்களும் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இதனை தொடர்ந்து, ராமேசுவரம் துணை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பிரிஜ்ஜோ உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயம் முன்பு மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது, துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சக மீனவர்களும் இணைந்து தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு நிற்பதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “எங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். இத்தாலி கடற்படையினரை கைது செய்ததுபோன்று, இலங்கை கடற்படையினரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை பிரிஜ்ஜோ உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

Source: Maalaimalar

Author Image
murugan