கையூட்டு வாங்குவதில் கைதேர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

கையூட்டு வாங்குவதில் கைதேர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்தியாவில் சில காரியங்கள் சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக 41% மக்கள் லஞ்சம் கொடுத்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெர்லின்:

சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கத்தின் தலைமையகம் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் உலகின் லஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த நாடுகள் எவை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 20,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.  

இந்த ஆய்வின் முடிவில் உலகளவில் லஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த வகையில் லஞ்சம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 41% மக்கள் அதாவது மூன்றில் இருவர் தங்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள லஞ்சம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சீனாவில் லஞ்சம் வழங்கி காரியங்களை சாதிப்போர் 73% பேர் என தெரியவந்துள்ளது. இது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் குறைந்த பட்சமாக 0.2% மக்கள் லஞ்சம் வழங்குகின்றனர். மொத்தமாக ஆசிய பசிபிக் பகுதிகளில் வசிக்கும் 900 மில்லியன் மக்கள் ஆண்டிற்கு ஒரு முறையேனும் லஞ்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 38% பேர் காவல் துறையினருக்கு லஞ்சம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர். வருமான பிரிவைப் பொருத்த வரை மற்ற துறையை விட காவல் துறையினர் அதிக லஞ்சம் வாங்கியிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

‘இப்பகுதியை சேர்ந்த சட்ட வல்லுநர்கள் லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சிறிய குற்றம் கிடையாது. இது எல்லா துறைகளிலும் சீர்கேட்டை ஏற்படுத்தக் கூடியது’. என சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கத்தின் தலைவர் ஜோஸ் யுகாஸ் தெரிவித்தார்.

Source: Maalaimalar

Author Image
murugan