முரண்பட்ட தகவலால் சந்தேகம் அதிகரிப்பு: ஜெயலலிதா மரண அறிக்கை பற்றி மு.க.ஸ்டாலின்-ராமதாஸ் கருத்து

ஜெயலலிதா மரணம் பற்றி எய்ம்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டது பற்றி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் டாகடர்கள் அறிக்கை ஆகியவற்றை தொகுத்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஜெயலலிதா மூச்சற்று மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர நீதிவிசாரணை கேட்டு 8-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஆனால் இது பற்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ஜெயலலிதா ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதல்-அமைச்சர் பொறுப்புகளை வகித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் அனைத்து விவரமும் தெரியும்.

எனவே இதில் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று கூறுகிறார்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இது பற்றி கூறுகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார்.

இப்படி இவர்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசுகின்றனர்.

அதுமட்டுமல்ல அப்பல்லோ ஆஸ்பத்திரி வெளியிட்டிருந்த மருத்துவ அறிக்கைக்கும் எய்ம்ஸ் டாக்டர்கள் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கைக்கும் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கையில் முதலில் கூறும் போது ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருந்ததாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் எய்ம்ஸ் டாக்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா மூச்சற்று மயங்கிய நிலையிலேயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் முன்னுக்கு பின் முரணான தகவல் பல இடம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மட்டுமல்ல. தமிழக முதல்-அமைச்சராக இருந்ததால் அவருக்கு அளித்த சிகிச்சைகள், மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

ஜெயலலிதா எந்த நிலையில் போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப் பட்டார்? அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்னென்ன? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஆஸ்பத்திரியில் அவரோடு உடன் இருந்தது யார் யார்? என்பதெல்லாம் தெளிவுப்படுத்தபட வேண்டும்.

அதனால்தான் இதில் முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் மட்டுமல்ல அனைத்து தலைவர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மருத்துவ அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த ஐயம் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலின் விளக்கத்திற்கு பிறகு 100 மடங்காக அதிகரித்தது என்றால், சுகாதாரத்துறை செயலாளரின் விளக்கத்திற்குப் பிறகு 1000 மடங்காக அதிகரித்திருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், அவரது மரணத்திலும் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விளக்கங்களை மட்டுமே சுகாதாரத்துறை செயலாளர் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ அந்த அறிக்கைகளில் சசிகலா தரப்புக்கு சாதகமாக உள்ள அம்சங்களை மட்டும் வெளியிட்டு, ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று தன்னைத்தானே நீதிபதியாக நினைத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்; சசிகலா தரப்புக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த போது அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சரோ அல்லது செயலாளரோ தான் மக்களுக்கு விளக்கமளித்திருக்க வேண்டும்.

ஆனால், ஜெயலலிதா மருத்துவம் பெற்ற 75 நாட்களில் அமைச்சர் விஜய பாஸ்கரோ, செயலாளர் ராதாகிருஷ்ணனோ ஒரு முறை கூட மருத்துவ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், இப்போது யாரையோ காப்பாற்ற அவசரமாக அறிக்கை வெளியிடுவது ஏன்?

கடந்த செப்டம்பர் 22-ந்தேதி இரவு வந்த அவசர அழைப்பை ஏற்று அப்பல்லோ மருத்துவமனையின் அவசர ஊர்தி போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்ற போது, அங்கு ஜெயலலிதா மூச்சு பேச்சின்றி மயங்கிக் கிடந்தார் என்றும், இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

ஏழரை கோடி தமிழக மக்களின் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா, மயக்கமடையும் நிலையில் தான் வீட்டில் வைக்கப்பட்டிருந்தார் என்பதிலிருந்தே அவரது பரிதாப நிலையை உணர முடிகிறது. இது அவரது மரணம் குறித்த மர்மங்களை அதிகரிக்கிறது.

ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல், நோய்த்தொற்று, ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி, தைராய்டு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்சனைகள் நீண்டகாலமாக இருந்து வந்ததாகவும் அப்பல்லோ மருத்துவ ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இவ்வளவு நோய்களால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்ததாக தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், வெறும் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டால் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று முதல் நாளும், ஜெயலலிதா குணமடைந்து விட்டார்; இயல்பான உணவை உட்கொள்ளத் தொடங்கி விட்டார் என்று அடுத்த நாளும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது ஏன்? அதுபோன்று அறிக்கை வெளியிடும்படி மருத்துவமனை நிர்வாகத்தை நிர்பந்தித்தவர்கள் யார்? ஜெயலலிதா சிகிச்சை காலத்தில் மருத்துவமனையில் முகாமிட்டிருந்த சுகாதாரத்துறை செயலருக்கு இதுவெல்லாம் தெரியாதா?

அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக் காரணமாக ஜெயலலிதாவின் உடல் நிலை தேறியதாகவும், ஒரு கட்டத்தில் காவிரி பிரச்சனை உள்ளிட்ட சில முக்கிய வி‌ஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடனும், பிற வி‌ஷயங்கள் பற்றி குடும்பத்தினருடனும் விவாதித்ததாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆலோசனை நடத்தும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறியிருந்தால் அவரை சந்திக்க தமிழக ஆளுனருக்கும், மத்திய அமைச்சர்கள், அண்டை மாநில ஆளுனர்கள், முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட எவருக்கும் அனுமதி அளிக்கப்படாதது ஏன்? ஜெயலலிதாவை எவரும் சந்திக்க விடாமல் தடுத்தது யார்? அவ்வாறு தடுக்கும் அளவுக்கு அவர்களின் திட்டம் என்ன?

உடல்நலம் தேறி வந்த ஜெயலலிதாவுக்கு 4.12.2016 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், உயிர்காக்கும் கருவிகளின் கட்டுப்பாட்டில் அவரை வைத்திருப்பதால் பயனில்லை என்பது குறித்து அப்போது முதல்வரின் பொறுப்புகளை கவனித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பித்துரை, சசிகலா, தலைமைச் செயலர் ராம மோகன்ராவ், மற்றும் சுகாதாரச் செயலாளரான தம்மிடமும் தெரிவிக்கப்பட்டதாகவும் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டு வழக்கமான நடைமுறைகளை செய்யும் படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டதாகவும், அதனடிப்படையில் ஜெயலலிதா மறைந்த செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சுகாதாரத்துறை செயலாளர் கூறுவதற்கும், அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ள மற்றவர்கள் கூறுவதற்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. அவை ஐயங்களை அதிகரிக்கின்றன.

1. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து என்னிடம் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை நிறுத்தும் முடிவே பன்னீர்செல்வத்திடம் விவாதிக்கப்பட்டு தான் எடுக்கப்பட்டது என்கிறார் ராதாகிருஷ்ணன். இருவரில் எவர் சொல்வது உண்மை?

2. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை நிறுத்தும்படி மருத்துவர்களுக்கு உத்தரவிட்டவர் யார்? என்று பன்னீர் செல்வம் அணித்தலைவர்களில் ஒருவரான பி.எச். பாண்டியன் வினா எழுப்பினார். பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் சொல்லித்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என சுகாதாரத் துறை செயலாளர் கூறுகிறார். இதற்கு ஓ.பன்னீர் செல்வத்தின் பதில் என்ன?

3. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நீரிழிவு நோயாளி ஜெயலலிதா 3 இனிப்புகளை சாப்பிட்டதாகவும், அதை தாம் பார்த்ததாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். இதற்கு அரசின் பதில் என்ன?

4. ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக தாம் பார்த்ததாகவும், அவரும் தம்மைப் பார்த்து இரட்டை இலை சின்னம் போன்று கை விரல்களை காட்டியதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். இதற்கு அரசின் பதில் என்ன?

5. ஜெயலலிதாவின் மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று முதலமைச்சராக இருந்த போது கூறிய ஓ.பன்னீர்செல்வம் அதை செய்யாதது ஏன்?

6. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிவருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். பன்னீர்செல்வம் கூறுவது பொய் என்றால் அவர் மீது தமிழக அரசு வழக்குத் தொடராதது ஏன்?

7. ஜெயலலிதாவை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசியதாக ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அவர் குடும்பம் என குறிப்பிட்டிருப்பது யாரை? அவர்கள் ஜெயலலிதாவுக்கு என்ன உறவு?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடை அளிக்கப்பட்டால் தான் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணத்தில் பெரிய மர்மம் இருப்பது உண்மை.

இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்புக்குமே பங்கு இருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து இவர்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ் சாட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

இருதரப்பும் மாற்றி மாற்றி பேசி மக்களை ஏமாற்றுகின்றனர். இதில் உண்மை கொண்டு வருவதற்காக ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து, அதை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

அதுமட்டுமின்றி இவ் வி‌ஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், பி.எச். பாண்டியன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும். தங்களிடம் தவறில்லை என்றும், உண்மையானவர்கள் என்றும் நம்பினால் அவர்களே தானாக முன்வந்து இச்சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Source: Maalaimalar