தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி அவசர கடிதம்

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி அவசர கடிதம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை:

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில், தமிழக மீனவர் பிரிட்டோ கொல்லப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாக் நீரிணையில் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு மீனவர் கொல்லப்பட்ட தகவலை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து ஏற்கனவே கடந்த 5-ம் தேதி தங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால், இப்போது நடந்த சம்பவம் மனிதாபிமானமற்ற மிகவும் கொடூரமான சம்பவம் ஆகும். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். மேலும், நமது குடிமக்களின் நலன்களை பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

எனவே, நமது மீனவர்களின் உணர்வுப்பூர்வமான வாழ்வாதார பிரச்சினையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாக் நீரிணையில் இலங்கை கடற்படையின் ஆக்ரோஷமான நடவடிக்கையை தடுத்து, அப்பாவி மீனவர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

முந்தைய ஒப்பந்தங்களை மீறி இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்த வேண்டும்.

பாக் நீரிணையில் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் நமது குடிமக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Source: Maalaimalar

Author Image
murugan