ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: 31 டாக்டர்கள் பொய் சொல்வார்களா?- இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: 31 டாக்டர்கள் பொய் சொல்வார்களா?- இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை என்று விளக்கம் அளித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், சிகிச்சை அளித்த 31 டாக்டர்களும் பொய் சொல்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை:

ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய மருத்துவ சங்கம் இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில கிளை தலைவர் டாக்டர் டி.என்.ரவிசங்கர், செயலாளர் டாக்டர் முத்துராஜன் ஆகியோர் கூறியதாவது:-

மருத்துவம் புனிதமான தொழில். எங்களை பொறுத்த வரை ஒரு நோயாளி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டால் கடைசிவரை மருத்துவ நெறிமுறைப்படி சிகிச்சை அளிப்பதுதான் எங்கள் கடமை. அதைத்தான் செய்து வருகிறோம். இதில் அரசியலுக்கு இடமில்லை.

ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட போது சுயநினைவிழந்து மோசமான நிலையிலேயே இருந்தார். அவருக்கு எய்ம்ஸ், அப்பல்லோ, லண்டன் டாக்டர்கள் இணைந்து சிறந்த சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். இதில் மர்மமும் இல்லை. ஒளிவு மறைவும் கிடையாது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை.

ஜெயலலிதா காயத்தோடுதான் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் எந்த அறிக்கையிலும் இல்லை. சிகிச்சை அளித்த 31 டாக்டர்களுமா பொய் சொல்வார்கள்?

உடல்நலம் முன்னேறிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென மாரடைப்பு வந்தது. மருத்துவ ரீதியாக சிகிச்சை அளித்ததில் எந்த குறையும் இல்லை. நோயாளியின் புகைப்படத்தை வெளியிட முடியாது. என்னென்ன மருந்துகள் அளிக்கப்பட்டன என்பது பற்றி விளக்கம் தர முடியாது.

மருத்துவ சிகிச்சையை அரசியல் ஆக்க வேண்டாம் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். சிகிச்சைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source: Maalaimalar

Author Image
murugan