சொந்த ஊருக்கு போன முதல்வருக்கு வரவேற்பு கொண்டாட்டம் அமோகம்

சேலம்: நேற்று இரவு விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் சேலம் அழகாபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார்.

சொந்த மாவட்டத்திற்கு சொந்த வீட்டிற்கு சென்ற முதல்வருக்கு வழிநெடுக அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். வீட்டிற்கு போகும் வழியில் ஈரோடு அருகில் நசியனூரில் உள்ள குலதெய்வத்தை வணங்கிவிட்டு தனது இல்லத்திற்கு சென்றார் பழனிசாமி.

முன்னதாக, ஈரோடு மாவட்ட அமைச்சரான கே.சி.கருப்பணன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜா சம்பத், ஈஸ்வரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பழனிசாமிக்கு மலர்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முழுவதும் சேலத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் நாளை சென்னை திரும்ப உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தங்கி இருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுபேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia