லஞ்சத்தில் போலீஸ் துறைக்கு முதலிடம் – மத தலைவர்களும் விதிவிலக்கல்ல: ஆய்வில் தகவல்!

இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்குவதில் போலீஸ் துறை முதலிடம் பிடித்துள்ளது. இதோடு பெரும்பாலான மத தலைவர்களும் லஞ்சம் சார்ந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெர்லின்:

இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்குவோரில் போலீஸ் துறைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. போலீசாரை தொடர்ந்து மத தலைவர்கள் அதிக லஞ்சம் சார்ந்த குற்றங்களில் தொடர்புடையவர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆய்வில் பங்கேற்றவர்களில் 85% பேர் போலீசார் அதிக ஊழல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மத தலைவர்களில் 71% பேர் ஏதாவது ஒரு வகையில் ஊழலில் தொடர்புடையவர்கள் என ஆய்வில் கலந்து கொண்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.      

தங்களது மத தலைவர்கள் எவ்வித ஊழலிலும் தொடர்பில்லாதவர்கள் என ஆய்வில் கலந்து கொண்டவர்களில் வெறும் 14% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மேலும் 15% பேர் ஊழல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்துள்ளனர்.   

இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்கும் துறைகளில் போலீசார் 85%, அரசாங்க அதிகாரிகள் 84%, வியாபார நிர்வாகிகள் 79%, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் 78% மற்றும் மத்திய மந்திரிகள் 76% உள்ளிட்டோர் டாப் 5 இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து வரித் துறை அதிகாரிகள் 74% பெற்று ஆறாவது இடமும், மத தலைவர்கள் ஏழாவது இடத்திலும் உள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வினை ஜெர்மனியின் பெர்லினை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar