டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா  வழக்கு: கூடுதலாக 4 மாத அவகாசம் கேட்டு சி.பி.ஐ மனு தாக்கல்

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கு: கூடுதலாக 4 மாத அவகாசம் கேட்டு சி.பி.ஐ மனு தாக்கல்

சென்னை : டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்க, மேலும் 4 மாதங்கள் அவகாசம் கேட்டு சி.பி.ஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி யாக பணிபுரிந்தவர் விஷ்ணுப்பிரியா. இவர் கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி விஷ்ணுப்பிரியா உடல் தூக்கில் தொங்கிநிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதனைத்தொடர்ந்து தன் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி விஷ்ணுப்பிரியாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி இந்த வழக்கை சிபிஐயிடம் மாற்றி , 3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் தான் சி.பி.சி.ஐ.டி வழங்கியதாகவும். விசாரணை சுமூகமாக நடப்பதாகவும் கூறி இந்த விசாரணைக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 4 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Source: OneIndia

Author Image
murugan