Press "Enter" to skip to content

பரபரப்புக்கு நடுவே அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெறுகிறது

சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி காலமானார். அவரின் இழப்பு அ.தி.மு.க.வுக்கு மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரவேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அமைச்சர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணி நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அ.தி.மு.க. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது.

செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. ஒவ்வொரு முறை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போதும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை.

கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அழைப்பு கடிதங்கள் கடந்த வாரம் தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடம் மொத்தமாக வழங்கப்பட்டு உள்ளது.

அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை நேரில் வரவழைத்து வழங்கி உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வர சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தங்குவதற்கு சென்னையில் ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் நேற்றே சென்னை வந்தனர்.

அ.தி.மு.க. நிறுவனத்தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு கட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைவர் பதவியை காலியாக வைத்து விட்டு, பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

அதேபோல் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை காலியாக வைத்து விட்டு, புதியதாக இணை பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி, அந்த பொறுப்பில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் கருத்துகள் உலாவுகிறது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா 7 முறை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்துள்ளார். இந்த முறை அவர் இல்லாமலே பொதுக்குழு, செயற்குழு முதல் முறையாக கூட உள்ளது.

ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூடும்போது அ.தி.மு.க.வினர் மிக உற்சாகமாக இருப்பார்கள். இந்த முறை தங்கள் தலைவியை இழந்த இக்கட்டான, சோதனையான காலக்கட்டத்தில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூடுகிறது.

அழைப்பு கடிதம் இல்லாமல் யாரும் பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லாதவாறு மண்டபத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த சோதனைகளுக்கு பிறகே பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். வாகனத்தில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்த தனி இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.