தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது வலுபெறாமல் அங்கேயே உள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். வட மாவட்டங்களில் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 62 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்றார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

நன்னிலம், ராமேசுவரம், குடவாசல், வலங்கைமான், கும்பகோணம், திருவாரூர், சூரக்குடி, காரைக்காலில் தலா 4 செ.மீ., திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பாம்பன், மன்னார்குடி, பட்டுக்கோட்டையில் தலா 3 செ.மீ., நீடாமங்கலம், பாபநாசம், பெருங்களூரு, அதிராம்பட்டினம், கறம்பக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டையில் தலா 2 செ.மீ., திருவிடைமருதூர், தரங்கம்பாடி, கந்தர்வகோட்டை, ஒரத்தநாடு, வேதாரண்யம், தொண்டி, ஆலங்குடி, லால்குடி, புள்ளம்பாடி, முத்துப்பேட்டை, கீரனூர், திருப்பத்தூர், திருவையாறில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Source: Maalaimalar